ஆச்சி எனும் ஆலம்


family blog
ஈஸ்வரி ஆச்சி-கந்தையா தாத்தா 

மலர்ந்த முகம் ,கணீரென்ற குரல், வெண்முத்துக்களை சிதற விட்டாற்போல சிரிப்பு. மறக்கவும் தவிர்க்கவும் முடியாத அன்பு நிறை ஆளுமை  - ஈஸ்வரி ஆச்சி  04 Aug 1933 - 03 Dec 2019 (ஆச்சி=பாட்டி=அம்மம்மா=Grand Ma)

family blog
திருமணத்தின் போது

பிறப்பால் ஈஸ்வரம். திருநெல்வேலி மாவட்டம் புதியம்புத்தூர் கிராமம். பண்ணை விவசாயமும், வியாபாரமும் செழிக்க செய்து வந்த எங்கள் பூட்ட தாத்தா மரியாதைக்குரிய பிச்சையா அவர்களின் மூத்த மகள். ஷண்முகசுந்தரம் என்ற கஸ்தூரி, சோணாசலம் என்ற கௌரி ஆகிய எங்களின் அன்பு சின்னாச்சிகளின் மூத்த தமக்கை. பெருமை மிகு இந்திய ராணுவத்தில் பர்மா போர் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் பணியாற்றி, பின் விருப்ப ஒய்வு பெற்று நெல்லையில் வணிக கணக்கு பணியாற்றி, என்றென்றும் எங்கள் நினைவிலும், குணத்திலும், பழக்க வழக்கங்களிலும், வாழ்வியல் நெறிகளிலும் வேரூன்றி வாழும் பேரன்பிற்கும் பெருமரியாதைக்குமுரிய எங்கள் கந்தையா தாத்தாவின் (இயற்பெயர் T. S. சுப்பிரமணியம் அவர்கள் 27 May 1922 - 07 Jul 1994) வாழ்க்கை துணைவி. 

family blog
ஆச்சியும் தாத்தாவும் இளமை காலத்தில் 

சம்பந்தம், மீனாட்சி, பிச்சம்மாள் என்ற எங்களின் அன்பான மூத்த தலைமுறை மாமா, பெரியம்மா, அம்மாவின் தாய். தாத்தா-வழி, ஆச்சி-வழி என்று இரு தரப்பிலும் கிளைத்தோங்கி வளர்ந்த எங்கள் பாச-பந்தங்களை தாங்கி நின்ற பல மூத்த வேர்களில் தாத்தாவும் ஆச்சியும் முக்கியமானவர்கள். இதை எங்கள் குடும்பத்தின் பல்வேறு பெரியவர்கள் அவர்களின் பால்ய கால கதைகளாக கூற கேட்டிருக்கிறோம்.ஆச்சிக்கு அவ்வப்போது, காலஞ்சென்ற அவளது நாத்தனாரின் அருள் இறங்குவது உண்டு என்றும் அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். அந்த சுவாரசியமான நிகழ்வுகளை அவர்கள் வாயிலாக நேரில் கேட்பதே சிறப்பு. அவ்வளவு அழகாக என்னால் எழுத்தில் வடிக்க இயலாது.

கந்தையா தாத்தா- கணபதி தாத்தா- சாம்பசிவம் தாத்தா அவர்தம் துணைவியருடன் குடும்ப புகைப்படம். கீழே உட்காந்திருப்பவர்கள் எங்கள் மாமா பெரியம்மா அம்மா அத்தைகள் 

 
நிற்க, இந்த பதிவில் எங்கள் வீட்டு மூத்தவர்களின் பெயர்களில்,அவர்களின் முழுப்பெயர் போலவே ஒட்டிக்கொண்ட சமுதாய குறியீடுகளை, வாசிக்கும் பரந்துபட்ட நட்புவட்டத்தை கருத்தில்கொண்டு நீக்கியுள்ளேன். வாசிக்கும் எங்கள் குடும்பத்தார்க்கு, அந்த குறியீடுகள் இல்லாமல் பெரியவர்களின் பெயர்கள் ஏதோ முழுமையடையாதது போல தோன்றினாலும் எனது உட்கருத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். மேலும் இந்த பதிவு உலகெங்கும் உள்ள நமது குடும்பத்தின் இன்றைய மற்றும் நாளைய தலைமுறைக்கு காலம்காலமாக தங்கள் முன்னோரை பற்றி எடுத்துரைக்கும் என்றும் நம்புகிறேன். அதுவே இதை வரைவதன் நோக்கம்.

மீண்டும் கதை நாயகியை நோக்கி திரும்புவோம்.

கந்தையா தாத்தா -ஈஸ்வரி ஆச்சி  சாம்பசிவம் தாத்தா-பிச்சம்மாள் ஆச்சி  குடும்ப புகைப்படம். நாற்காலியில்  இடது முனை அம்மா மற்றும் சித்ரா சித்தி. வலது முனை மீனாம்மா. மேலே நடுவில் இடப்புறம் சொக்கு மாமா வலப்புறம் ராஜு மாமா. 

 
செல்வ செழிப்பு, பற்றாக்குறை இரண்டையுமே தன் வாழ்நாளில் அசால்டாக கடந்தவள் ஆச்சி. சிறுசேமிப்பு, வங்கி கணக்கு இவற்றிலெல்லாம் தேர்ச்சி பெற்றவள். “உங்க தாத்தா சம்பாத்தியத்துல மூணு பிள்ளேள படிக்க வச்சு ரெண்டு பொம்பள பிள்ளேள கட்டி குடுத்து வீட்டுக்கு வாரவங்களையும் கவனிச்சிருக்கேன். வீட்ல எப்பவுமே பத்து பேர் கூடத்தான் இருப்போம். இப்ப நீங்க இப்படி தெணறுதீயளே” என்பாள். 

ஒரு வேலையை புதிதாய் கற்பவர்கள் அதை பிறர் செய்யக்கண்டு தாம் எவ்வாறு பயில வேண்டும் என்பதற்கு ஆச்சியின் சொலவடை "கண் பார்க்க கை செய்யணும்".
“ஆட்ட தூக்கி மாட்ல போடவும் மாட்ட தூக்கி மனுசன்ல போடவும் தெரியணும்”  வரவு செலவை சமாளிக்க அவள் சொல்லும் சொலவடை இது. இப்படி பேச்சு வாக்கில் அவள் எல்லாருக்கும் அளித்த mentoring-ஐ சொல்லிக்கொண்டே போகலாம் 

உண்மை. ஒரு கல்யாண வீட்டு கூட்டத்தை ஒத்தையாக சமாளிக்க தெரிந்த ஆளுமை அவள்.  அதே போன்று அவள் சொல்லை சிரமேற்று அவள் நேர்மைக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் குடுத்த கந்தையா தாத்தாவிற்கும், ஏனைய ஆச்சி தாத்தாக்களும், மாமா அத்தை சித்தி அனைவருக்கும் இங்கு நன்றிகளை சொல்லியே ஆகவேண்டும். ஒரு பெரிய குடும்பம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை ஆச்சியுடன் சேர்ந்து எல்லாரும் எங்களுக்கு வாழ்ந்து காமித்திருக்கிறார்கள்.

Family blog
முப்பெரும் தேவியர் இ-வ: மீனாட்சி ஆச்சி- ஈஸ்வரி ஆச்சி- பிச்சம்மாள் ஆச்சி 

 இவ்வளவு இருப்பினும் அவளுக்கு பிடிக்காத ஒன்றை பற்றி பேசினால் அவளுக்கு வரும் லேசான எரிச்சலையும் தேனொழுகும் நெல்லை வட்டார வழக்கில் அவள் சொல்ல தவறியதில்லை. “தீய வச்சு கொளுத்து" , “தீவட்டி” எதன் மீதோ, எவர் மீதோ கோபம் வந்தால் அவள் உதிர்க்கும் சுடுசொற்கள் இவை 😊 அதேபோல நாசூக்காக நையாண்டி செய்வதிலும் திறமைக்காரி ! குறிப்பாக சமையலில் ஏதேனும் குறை இருப்பின் மெதுவாக பிறர் கேட்காவண்ணம் நமுட்டு சிரிப்புடன் “என்ன மாய சோத்த பொங்கிருக்கா” என்று கெக்கரிப்பாள். 

family blog
பொன்நகை  வேண்டாம் புன்னகையே போதும் !! கூட்டத்தில் தனித்து தெரியும் ஆச்சியின் மலர்ந்த முகம் (பின்னால் லேசாக தெரிவது மீனு மாமா, கிட்டு தாத்தா )

இதற்கு நேர்மாறாக பேரன் பேத்திகளை கண்டால் பனிக்கட்டியாக உறுகுவாள். “அடி என் தங்கக்கப்பல் வந்தாளாம்” என்று என்னையும், என் மகளையும், எல்லா குழந்தைகளையும், கடைக்குட்டியாக சமீபத்தில் பிறந்த பூட்டியையும் கொஞ்சி விட்டுத்தான் சென்றிருக்கிறாள். என் பேறுகாலத்தின் போதே அவளுக்கு கிட்டத்தட்ட எழுபது வயது இருக்கும். இருப்பினும் சளைக்காமல் வீட்டிலேயே பேறுகால மருந்து தயாரித்ததிலும், என் மகளான அவள் பூட்டிக்கு உறமருந்து செய்ததிலும் தன் நிபுணத்துவத்தை காமித்த தாய்-மருத்துவச்சி அவள். நான் பேறுகால அறைக்குள் செல்கையில் என் பெற்றோர், கணவர், மாமியார் இவர்களையெல்லாம் முன்விட்டு தான் பின் தள்ளி இருந்து தனது பதைபதைப்பை மறைத்தவள். என் பிள்ளைக்கு முதன்முதலில் வெண்சங்கில் பால் புகட்டியவள்! அவளின் பூப்பையும் ஆசீர்வதித்தவள்! அந்த பேறு பெற்றதில் அவளின் மூத்த பேத்தியாக எனக்கு என்றென்றும் பெருமிதம் மிகுந்தோங்கும்.


கண்ணண்ணனுடன் மீனாம்மா- பின்னால் அம்மா மற்றும் ஆச்சி

மணி அண்ணனுடன் ராஜு மாமா மற்றும் அம்மா 

இ-வ நிற்பவர்கள் மரகதம் அத்தை, மீனாம்மா, பிச்சையா தாத்தா, அம்மா, அப்பா. கீழ்வரிசை லதா சித்தி, பக்கத்துக்கு வீட்டு பாப்பா, துவிஜா, ப்ரியா , கந்தையா தாத்தா, ஈச்சுகுட்டி  (எ) அம்பிகா 

ஆச்சி என்று வந்தபின் சாப்பாட்டை பற்றி எப்படி பேசாமலிருக்க முடியும்?!
நெல்லை வட்டார சாம்பார்-அவியல், சொதி, அவளின் தனித்துவம் வாய்ந்த ரசம், புளிக்குழம்பு, கூட்டாஞ்சோறு, உளுந்தம்பருப்பு சாதம், அடை, உளுந்தங்களி, சுக்குகளி இவற்றையெல்லாம் எவ்வளவு விவரித்தாலும் பத்தாது. அவள் செய்து தரும் தாளித்த கொழுக்கட்டை ருசியால் கொழுக்கட்டை ஆச்சி என்றே என் மகள் வைத்த ஒரு அடைமொழியும் அவளுக்கு உண்டு. தாத்தாவுக்கு பிடித்த சப்பாத்தி குருமா, பிரட் டோஸ்ட் , எங்கள் அண்ணன்களுக்கு பிடித்த கிச்சடி, பின்னாளில் தங்கைகள் கேட்டு செய்த சேமியா உப்புமா நூடுல்ஸ் என்று நளபாகத்தில் களை கட்டுவாள். அவள் செய்த சுக்குகளி போல் இன்னொறு gourmet confection எனக்கு இனிமேல் கிட்டாது. கை சுத்து முறுக்கில் கில்லாடி! அதிரசத்தில் அதிரடி! அவள் செய்தாலே எதிலும் ருசி சரவெடி! தீபாவளிகள், அவள் தின்பண்டங்களால் நிறம்பும். பொங்கலன்று அவள் வெட்டி தரும் கரும்பு தான் இனிக்கும்.

(இ) கந்தையா தாத்தாவுடன் துவிஜா (வ) ஈச்சு மற்றும் துவிஜா

ஈச்சு துவிஜாவுடன் கந்தையா தாத்தா. பின்னால் நிற்பது ஆச்சி 

காலங்கள் செல்ல செல்ல எல்லோரும் ஊரொன்றும் நாடொன்றுமாய் பிரிந்தாலும் பொங்கலன்றும், தீபாவளியன்றும் எங்கள் வரவுக்காக  வழிமேல் விழி வைத்து காத்திருப்பாள். எல்லோரும் ஓரிடத்தில் ஒன்று கூடும் வரை அவளுக்கு இருப்பு கொள்ளாது.


ஒரு பொங்கலன்று ஆச்சியுடன் ஈச்சு

தாத்தாவின் மறைவுக்குப்பின் மனம் துவண்டவள் மாமாவின் எதிர்பாரா மறைவுக்குப்பின் முற்றிலுமாக ஓய்ந்தாள். 


சம்பந்தம் (எ) எங்கள் அன்பு ராஜு மாமா 

சென்ற சில வருடங்களில் ஒவ்வொரு முறை விடுப்பு முடிந்து ஊர் திரும்புகையில் "அடுத்த லீவுக்குள்ள ஆச்சிய ஆண்டவன் கூப்டறணும்னு வேண்டிக்கோ" என்றே சொல்ல ஆரம்பித்தாள். நெறி தவறாது நீடூழி வாழ்ந்தவள் சென்ற டிசம்பர் மூன்றாம் நாள் நீண்ட துயில் கொண்டாள். 

அவள் இருக்கும் வரையில் தான் முப்பது நாப்பத்தை கடந்த அவளது பேரன்- பேத்தியாகிய நாங்கள் குட்டி என்று அழைக்கப்பட்டோம். அவளோடு தீர்ந்தது எங்கள் சிறு பிராயம். இனி இந்த மாய உலகில் நாங்களும் மாய வயது எய்தினோம்.


என்றென்றும் வாழும் எங்கள் தங்க கப்பல் 
(பின்னால் இருப்பது சின்ன செல்லப்பா மாமா )

பி.கு: இந்த பதிவிற்காக, பழைய ஆல்பங்களில் இருந்து தேடிப்பிடித்து புகைப்படங்கள் தந்து உதவிய குடும்பத்து பெரியவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். 

Comments

U-t-h-r-a said…
Reminds me of my paati Akka. Even though those gen ladies didn’t go to school much , they were in every way knowledgeable than us and had brilliant governance. Iam not sure whether we will be able to command that much respect as them . They were very delicate yet strong. They knew their way in the family . V r lucky to have such role models.
Priya Rajan said…
very true Uthra, thank you for sharing similar experiences from your side