ஓர் ஆற்றுப்படுகையின் ஓலம்

மணல் கொள்ளை நதி நீர் இந்தியா கர்நாடகா
அன்று மூழ்கி முத்தெடுத்தார்கள் இன்று மண்ணெடுக்கிறார்கள்   பு: காளிராஜன் சுப்ரமணியன்

சில மாதங்களுக்கு முன் கர்நாடக மாநிலம் உடுப்பி நகருக்கு சுற்றுலா சென்றிருந்தோம். அங்கிருந்த சுவர்ணா என்னும் அழகிய நதியில் படகு சவாரி மேற்கொண்டோம். அது ஒரு இனிமையான அதிகாலை. ஆதவன் மெல்ல மெலெழும்ப நதி தேவதை அவன் ஒளியில் ஜொலித்து கொண்டிருந்தாள். நீர் பறவைகளும், தென்னந்தோப்புகளும், சற்றே நிதானமாக கழியும் சிறு நகர வாழ்வும் பார்ப்பதற்கு பேரழகாய் இருந்தன.

மணல் கொள்ளை நதி நீர் இந்தியா கர்நாடகா
சுவர்ணாவில் சூரியோதயம்  பு: காளிராஜன் சுப்ரமணியன்

மணல் கொள்ளை நதி நீர் இந்தியா கர்நாடகா
தன் காலை சிற்றுண்டி தேடும் நீர்காகம்  பு: காளிராஜன் சுப்ரமணியன்

படகு சவாரி தொடங்கி சிறிது நேரத்திற்குள் எங்களுக்கு முன்னே நான்கைந்து சிறிய துடுப்பு படகுகள் செல்வது கண்டோம். அவை அனைத்தும் எந்த நொடியிலும் மூழ்கி விடலாம் என்பது போல் தோற்றமளித்தன. ஆனால், என்ன ஒரு ஆச்சரியம்! படகோட்டிகளோ மற்றவர்களோ துளியும் பதட்டமின்றி காணப்பட்டனர். எங்கள் படகு அவர்கள் அருகில் செல்ல, காரணம் புரிந்தது. படகு நிறைய மண் - ஆற்று மண்! அந்த கணம் வரையில் ஆற்றிலிருந்து மண் எடுக்கப்படுவதை பற்றி கேள்வி பட்டிருந்தோம், படித்தும் இருந்தோம். அன்று தான் முதன்முறையாக நேரில் கண்டோம்.

மணல் கொள்ளை நதி நீர் இந்தியா கர்நாடகா
மூழ்குவதுபோல் தெரிந்த படகுகள்  பு: காளிராஜன் சுப்ரமணியன்

மணல் கொள்ளை நதி நீர் இந்தியா கர்நாடகா
மண் அள்ளும் குழு பு: காளிராஜன் சுப்ரமணியன்

 ஆற்று மணலை பற்றி இதுவரை பெரிதாக சிந்தித்திராத என் போன்ற சாமானியர்களுக்கு ஒரு முன்னோட்டம் - கட்டுமான பணிகளில் மண்ணின் அத்தியாவசியத்தை பற்றி நாமெல்லோரும் அறிவோம். சிமெண்டும் மண்ணும் சராசரியாக 1:4 அல்லது 1:6 என்ற விகிதத்தில் கலக்கப்பட்டே உபயோகப்படுத்தப்படுகின்றன. அதாவது ஒரு மூடை சிமெண்டிற்கு நான்கு அல்லது ஆறு மூடை மண்! இதை தவிர சிலிக்கான், டைட்டானியம், ஜிர்க்கோனியம் போன்ற தாது பொருட்களை பிரித்தெடுப்பதற்கும் கண்ணாடி, கான்க்ரீட் ஆகியவற்றின் உற்பத்திக்கும் மண் உபயோகப்படுத்தப்படுகிறது. பண்டைய காலங்களில் இவ்வாறு தேவைப்பட்ட மண்ணை தரிசு நிலங்களில் குழி தோண்டியும், இயற்கையாக அமைந்த மணல் மேடுகளில் இருந்தும் அள்ளினார்கள். காலப்போக்கில் ஜனத்தொகையும் அதனோடு சேர்ந்து மனிதனின் தேவைகளும் விண்ணளவு அதிகரிக்கவே கடற்கரை, ஆற்று படுகை ஆகியனவும் மண்ணள்ளும் களங்களாயின. இதனால் ஏற்படக்கூடிய இயற்கை சீர்கேடுகளை தவிர்க்கவும் அள்ளப்படும் மண்ணின் அளவு மற்றும் மண்ணள்ளும் முறைகளை நெறிப்படுத்தவும் உலகெங்கும்  அரசாங்கங்களும் ஏனைய சூழல் ஆய்வகங்களும் பல கோட்பாடுகளை வகுத்தன.

மணல் கொள்ளை நதி நீர் இந்தியா கர்நாடகா
அள்ளிய மண்ணை சுமந்து செல்ல தயாராக நிற்கும் லாரி  பு: காளிராஜன் சுப்ரமணியன்

 சரி, ஆற்றிலும் கடற்கரையிலும் திட்டுக்களிலும் மண் இருக்கவேண்டியதன் அவசியம் தான் என்ன? நம்மில் பலருக்கு இதன் விடை தெரிந்திருந்தாலும் நன்றாக மனதில் பதியும் வண்ணம் மீண்டும் ஒரு முறை நினைவு கூர்வோம். நம் காலடியில் இருக்கும் பூமி மண்ணாலானது. இயற்கை அன்னை எல்லா உயிர்களுக்கும் கொடையளித்த மெத்தை, மண். மரம் செடி கொடிகள் வளரவும் நிலத்தடியில் நீர் தேங்கவும் எண்ணிலடங்கா சிறு மற்றும் நுண்ணுயிர்களுக்கு உறைவிடமாகவும் மண் விளங்குகிறது.  எங்கோ இருக்கும் பாலை வனங்களில் காணப்படும் மணல் மேடுகள் கூட புயல் சூறாவளியின் சீற்றத்தை தடுக்கவும் அகால பருவ நிலை மாற்றங்களினால் விளையும் பேரிடர்களை மட்டுப்படுத்தவும் இன்றியமையாத பங்களிக்கின்றன. கடற்கரையில் மண் இல்லையென்றால் ஒன்றிரெண்டு பேரலைகள் அடித்தாலும் ஊருக்குள் நீர் புகுந்து விடும். மேலும் கடற்கரை மண் என்பது தரை வாழ் பறவைகள், பூச்சிகள், முட்டையிடும் ஆமைகள், மற்றும் கணக்கிலடங்கா சிறு மற்றும் நுண்ணுயிர்களின் வாழ்விடம். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தே இந்த பூமியை மனிதன் வாழ தகுதியாக்குகின்றன.

மணல் கொள்ளை நதி நீர் இந்தியா கர்நாடகா
ஸ்வர்ணா நதியின் மேல் பறக்கும் வெள்ளை அரிவாள் மூக்கன் பறவைகள்  பு: காளிராஜன் சுப்ரமணியன்

 ஆற்று படுகையில் இருக்கும் மண் ஆற்று வெள்ளத்தை கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றுகிறது. படுகையில் மண் அள்ளப்படுவதால் ஆற்றின் ஆழம் அதிகரித்து அதன் வாயிலாக கரையில் மண் அரிப்பு ஏற்படுகிறது. இது ஊருக்குள் வெள்ளநீர் புகும் அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கிறது. இதுவே சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கிற்கு காரணம். மேலும் இதன் மூலம் ஆற்றின் முகப்பு அதிகரித்து அது கடல் நீர் ஆற்றுக்குள் புகுவதற்கும் வழி வகுக்கிறது. ஆற்று நீரில் உப்புத்தன்மை அதிகரித்தால் அது நம் புழக்கத்திற்கு தகுதியில்லாமல் போவதோடு நன்னீர் வாழ் மீன்கள் தாவரங்கள் போன்ற உயிரினங்களையும் பாதிக்கிறது. கரையில் ஏற்படும் மண் அரிப்பு கரை வாழ் உயிரினங்களை வெகுவாக பாதிக்கிறது.  ஆற்றுப்படுகையில் அள்ளப்படும் மண் ஆற்றில் கட்டப்பட்ட பாலங்களின் அஸ்திவாரத்தை வலுவிழக்க செய்து அவை இயல்பாக  செயலாற்றக்கூடிய காலகட்டத்திற்கு வெகு முன்னரே இடிந்து விழவும் காரணமாகிறது. இதற்கான உதாரணங்களை நாம் பருவமழை காலங்களில் நமது நாட்டில் பல்வேறு இடங்களில் பார்த்திருக்கிறோம். 

மணல் கொள்ளை நதி நீர் இந்தியா கர்நாடகா
இடிந்த ஆற்றுப்பாலம் பு: https://www.thenewsminute.com/article/bridge-collapse-mangalurus-phalguni-river-locals-blame-illegal-mining-83715

மணல் கொள்ளை நதி நீர் இந்தியா கர்நாடகா
மண் அரிப்பின் விளைவுகள் பு:இணையம் 

இவை எல்லாம் இருக்க, நாங்கள் அன்று சுவர்ணா நதியில் கண்ட காட்சிகள் எங்களை விழிக்க செய்ததோடு மட்டும் அல்லாமல் ஆற்று மண் அள்ளப்படுவதை பற்றி ஆழமாக யோசிக்கவும் வாசிக்கவும் தூண்டியது. இது உலகளவில் நதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமை, நமக்கு நாமே ஏற்படுத்தும் பேராபத்து. அன்று மண் அள்ளப்பட்ட விதத்தில் சில நெறிமுறைகள் என்னவோ கடைபிடிக்கபட்டுக்கொண்டு தானிருந்தன. மோட்டார் படகுகள் இல்லை, கை துடுப்பு தான். மண் அள்ளவும் தடை விதிக்கப்பட்டிருந்த மோட்டார் இயந்திரங்கள் இல்லை. உயிரை பணயம் வைத்து நீருக்கடியில் ஆழத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கி வாளிகளில் அள்ளி படகில் நிறைத்து கொண்டிருந்தார்கள். ஆயினும் கண் முன்னே கண்ட நிதர்சனம் பல கேள்விகளை எழுப்பியது - சுற்றுப்புற சூழலை பாதிக்காத வகையில் வளர்ச்சி என்பது சாத்தியமே இல்லையா? இதற்கு நிலையான மாற்று வழிகள் என்ன? அவற்றை நாம் எவ்வளவு தூரம் ஆய்ந்தறிந்து பின் பற்றுகிறோம்? சுற்றுப்புற சூழல் மேம்பாடு என்ற  பொதுவான நோக்கத்தை கருத்தில் கொண்டு, சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு, வறுமை ஆகிவற்றை நாம் எவ்வாறு களைய போகிறோம்? நமக்கிருக்கும் ஒரே வீடான இந்த புவியை காக்க, நமது மொத்த ஆக்க சக்தியையும் ஒருங்கிணைத்து வருங்கால சந்ததி வாழ வழி வகுப்போமா? நல்லதோர் உலகம் செய்வோம், செய்தேயாகவேண்டும்.  வேறு வழியில்லை.

மணல் கொள்ளை நதி நீர் இந்தியா கர்நாடகா
படகு நிறைய மண்  பு: காளிராஜன் சுப்ரமணியன்

மணல் கொள்ளை நதி நீர் இந்தியா கர்நாடகா
ஆபத்தான பேருழைப்பிற்குப்பின் சிறிது ஒய்வு  பு: காளிராஜன் சுப்ரமணியன்

சில மாற்று வழிகள்  (will keep adding as I get to know more) - 

https://www.thebetterindia.com/187863/uttar-pradesh-girl-quits-us-job-sustainable-homes-stubble-burning-india/

https://www.thebetterindia.com/187517/dump-the-ac-use-these-3-green-cooling-solutions-while-building-your-home/?utm_source=fb&utm_medium=link&utm_campaign=fresh&utm_content=norbu


I have cautiously not listed M-sand as an alternative here, as first hand it is in turn made by crushing rocks and hence I am not sure how sustainable that is. Secondly, I have not yet come across any domain expert's recommendations of it based on extensive studies 

Comments