![]() |
PC: Internet |
மேடு தாண்டி குதித்தது
ஒரு நிழல் ...
அதன் மேனியெங்கும்
செந்தழல்
நிறம் சாம்பல் கனல் கண்கள்
அடியும் முடியும்
அளக்கவியலா ஓங்கு
இவ்வாறிருந்தது
வந்தவன் பாங்கு
உடுக்கை உயிர் உலுக்க
சூலம் சுழன்றடிக்க
ஆடலானான் ஒரு ஆட்டம்
கண்ட யோகியரும்
பிடித்தனர் பேயோட்டம்
ஐயா, நீர் யார் ?
எங்கு வந்தீர் ? எதற்கு இவ்வளவு கோபம் ?
- மெல்ல நான்
ஆடி திரிந்த ஆரண்யம்
என் தாகம் தணித்த நீரோட்டம்
பாடி திரிந்த வண்டினம்
வனம் காத்து களித்த விலங்கினம்...
எங்கும் தேடினேன் யாதொன்றும் கிட்டவில்லை
பொங்கி பிளிறினேன், பொறுத்தும் பயனில்லை
-இது அவன்
ஏதேதோ சொல்கின்றீர்
எனக்கொன்றும் விளங்கவில்லை
கட்டிடம் கான்க்ரீட்டன்றி
கண்டதிங்கு வேறில்லை
-நானே தான்
எள்ளி நகைத்தான்
இடியையொத்தது பேரிரைச்சல்
அள்ளி முடிந்தும்
அடங்க மறுத்தது அவன் கூந்தல்
வான் பிளக்க
நிலம் நடுங்க
வந்தது மகா பிரளயம்
அண்டம் கண்டதில்லை
அப்படி ஒரு அவலம்
![]() |
PC: Internet |
வாழ்ந்து கிழித்தது போதும்
வந்தென்னிடம் சேருங்கள்
வட்டியும் முதலுமாய் கணக்கு
வறுத்தெடுக்கிறேன் பாருங்கள்
- அவன் தான், ஐயமென்ன
மூச்சு நிற்கும் முன்னே
முடிவு தெரிய வேண்டி
பேச்சிருக்கும் பொழுதே
பெரிதும் முயன்று கேட்டேன்
ஐயா, நீர் யார் ? ஏனிங்கு வந்தீர் ?
எதற்கிந்த ரௌத்ரம் ?
நிழலென நின்றவன்
நெற்றி கண் திறந்தான்
தழலெனை தீண்டியது போல்
தகித்தது அவன் பார்வை
சிவன் என் பெயர்
உன் பாட்டனுக்கு முப்பாட்டன்
அழித்தல் என் தொழில்
மனிதா, நீ பெரும் மூடன்.
காலம் கடந்தும் கற்கவில்லை என் சூட்சுமம்
அரங்கேற்றலாயிற்று என் ருத்ர தாண்டவம்
வந்தேன் உனக்கொரு பாடம் சொல்ல
அழிப்பவன் அழிவான் எனும் வேதம் சொல்ல
வந்தேன் உன் இனத்திற்கே பாடம் சொல்ல
அழிப்பவன் அழிவான் எனும் வேதம் சொல்லஆதி சிவன் என் நாமம்
தீயதொழித்தல் என் கர்மம்...
ஆடி தணிந்தான்
அழிந்தது மானுடம்.
![]() |
PC: Internet |
Comments