என் வீடு ?

Image result for image of captive elephant

நம்மை திடீரென்று யாராவது வலுக்கட்டாயமாக கடத்தி சென்றால் 
எப்படி இருக்கும் ?
இனி வீடு திரும்பப்போவதே கிடையாது என்று உணரும் அந்த நொடியின் வலி எவ்வளவு கொடியதாய் இருக்கும் ?
அம்மாவின் பாசம், சுற்றத்தின் நேசம், பிரியமான உணவு, என் வீட்டின் வாசம் எல்லாம் தொலைந்தது... ஒரு நொடியில்... நிரந்தரமாக

புது இடம் அந்நியமாக இருக்கிறது. யாரையும் தெரியாது. இரண்டு கால்களால் நடக்கும் ஒரு வினோத ஜந்து எந்நேரமும் என்னை ஆளுகிறது. அதன் கையில் பயங்கரமான ஒரு கோலும் கூரிய கொக்கியுள்ள ஒரு அங்குசமும் உள்ளது. அதன் ஆணைக்கு நான் கீழ்படியாவிட்டால் அது என்னை அந்த கோலும் அங்குசமும் கொண்டு தாக்குகிறது. ரொம்ப வலிக்கிறது . அளவான சாப்பாடு, நீண்ட நேர வேலை, ரொம்ப சின்ன உறைவிடம் இவ்வளவு தான் என் உலகம். ஆதரவாக இருக்க ஒரு ஆன்மா கிடையாது. அனுதினமும் என் வீட்டை நினைத்து நான் கண்ணீர் வடிக்கிறேன். பல நூறு மைல்களுக்கு அப்பால் என் குடும்பமும் என்னை நினைத்து வாடுகிறது....

ஒரு நொடி மேற்கூரிய அனுபவம் நமக்கு நேர்ந்தால் என்ன ஆகும் என்று யோசித்து பார்ப்போமா ...
நினைக்கவே நெஞ்சு பதறும் இந்த கொடுமையை தான் நாம் காட்டிலிருந்து பிடிபட்ட யானைகளுக்கு கொடுத்து கொண்டிருக்கிறோம்.

Image result for image of captive elephantImage result for image of captive elephant


வழிபாட்டு ஸ்தலங்களிலும் சுற்றுலா தலங்களிலும் ஒரு சில நொடிகள் நம் மகிழ்ச்சிக்காக நாம் பயன்படுத்தும் இந்த யானைகள் தம் வாழ்நாள் முழுவதும் சொல்ல ஒண்ணா தனிமையிலும் துயரத்திலும் அவதிப்படுகின்றன. யானை, கூட்டமாக வாழும் பண்பு உடையது. வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட தனிமை ஒன்றே அதன் வாழ்நாள் முழுவதும் அதனை மிகுந்த மன உளைச்சலுக்கு உண்டாக்கும். அதோடு சேர்த்து உடல் அளவில் பயிற்சி என்ற பெயரில் நாம்  உண்டாக்கும் காயங்கள் சொற்களில் அடங்காத வேதனையை அதற்கு கொடுக்கும். 

Image result for image of captive elephantImage result for image of captive elephant

பின் ஏன் நாம் இந்த வன்செயலை செய்கிறோம் ? 
காட்டரசனின்/காட்டரசியின் கையில் காலணாவை திணித்து நாம் வாங்கும் ஆசீர்வாதம் உண்மையில் ஒரு காட்டின் சாபமேயாகும் அல்லவா ?
எந்த அதிர்ஷ்டம் கிட்டும் என்று கூட்டம் நெரிசலடிக்கும் நம் திருவிழாக்களில் அவற்றை கொணர்ந்து நிறுத்துகிறோம் ?
யானை மீது அம்பாரியாக வலம் வந்தால் மட்டுமே தரிசனம் உண்டு  என்று எந்த கடவுள் நம்மிடம் கூறினார் ?

சில நொடிகள் தயவு கூர்ந்து இதை பற்றி சிந்திப்போமா ...
இவ்வாறு பிடித்து பழக்கப்படுத்தப்பட்ட யானைகளின் தற்போதைய பராமரிப்பு நிலை பற்றிய உண்மை செய்தி கீழ்கண்டவாறு  - 

https://m.hindustantimes.com/india-news/bruised-starved-and-sick-the-sorry-state-of-captive-elephants-in-india/story-ZAGBcVn2Ekyi8K98WCY6PP_amp.html

இதை வாசித்த பின்பு நாம் பதை பதைப்போமேயாயின் இவ்வுலகில் இன்னும் கருணை வற்றவில்லை என்று பொருள்யானைக்கு பிச்சை இடுவதையும் அதன் மீது சவாரி செய்வதையும் நாம் விட்டு விட்டால் அவற்றின் வாழ்வில் நல்வழி பிறக்க மிகுந்த வாய்ப்புள்ளது. பொதுமக்களாகிய நாம் இதை செய்தால் இந்த யானைகளின் பராமரிப்பை அறநிலைய துறையும், வனத்துறையும் , சில நல்ல தன்னார்வ  தொண்டு நிறுவனங்களும்  பார்த்து கொள்ளும். அப்படிப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம் தான் பெங்களூரின் அருகே மாலூரில் செயல்படும் Wildlife Rescue and Rehabilitation Centre, WRRC Indiaஇவர்களின் யானை பராமரிப்பு நிலையத்திற்கு சென்று வந்த எனது அனுபவமே இந்த பதிவு.

இரு தேவதைகள் 
WRRC Malur விலங்குகளின் மீது ஆழ்ந்த அன்பு மற்றும் அவற்றின் பராமரிப்பில் மிகுந்த அனுபவம் உள்ள குழுவினரால் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கு பெங்களூருவில் இரு கிளைகள் உள்ளன. பன்னேர்கட்டா தேசிய பூங்காவிற்கு அருகில் ஒன்று, மாலூரில் ஒன்று. இது போக தமிழ்நாட்டில் மரக்காணத்தில் ஒரு கிளை செயல் பட்டு வருகிறது. இவற்றுள் மாலூரும் மரக்காணமும் யானைகள் மறுவாழ்வு சிறப்பு மையங்கள் ஆகும். பன்னேர்கட்டா கிளையில் பறவைகள் மற்றும் ஏனைய வனவிலங்குகள் பராமரிக்கப்படுகின்றன 

http://wrrcindia.org/captive-elephant-welfare
http://wrrcindia.org/captive-elephant-welfare/elephant-care-facilities/

யானைளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு அவற்றை சுதந்திரமாக காட்டிலும், நம்மூர் வழிபாட்டு தங்களிலும் பார்த்திருந்தாலும், மறுவாழ்வு மையத்தில் அவற்றை சந்திப்பது எனக்கு இதுவே முதல் முறை. அங்கு இருக்கும் இரு யானைகளும் நெடுங்காலம் பல கொடுமைகளுக்கு ஆளாகி இருந்ததினால் அவற்றின் குணாதிசயம் எப்படி இருக்குமோ என்று ஒரு வித குழப்பத்திலும் ஒரு புதிய அனுபவம் என்றுமே தரக்கூடிய ஒரு குதூகலத்திலும் மாலூர்க்கு சென்றேன். மையத்தில் நுழையும் முன்னர் சிறிது தூரத்திலிருந்தே கௌரியையும் அனீஷாவையும் பார்த்த அந்த வினாடி, என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. கௌரி (சுமார் 35 வயது) நிதானமாக பச்சை புல்லை ருசித்து கொண்டிருந்தாள். அனிஷா (சுமார் 60 வயது) அங்கு பிரத்யேகமாக சமைக்கப்பட்டிருந்த கேப்பை உருண்டைகளை சுவைத்து கொண்டிருந்தாள். கால்களை இறுக்கி பிணைக்கும் இரும்பு கம்பிகளில்லை. உடம்பை சுற்றி அழுத்தும் கயிறுகளில்லை. அதட்டி உருட்டும் மனிதரின் ஆணைகளில்லை. எங்கும் சாந்தி நிலவுவது போல ஒரு அமைதியான சூழல். சத்தமின்றி காரை பார்க் செய்து விட்டு தன்னை மறந்து இறங்கி நின்றேன்.என் முன்னே இரு தெய்வங்கள்! அளவில்லா கொடுமைகளை தாங்கிய பின்னும் அன்பும் நேசமும் இன்னும் எஞ்சியிருக்கும் உள்ளம் கொண்ட தெய்வங்கள். 

அனிஷா
அனிஷா தன் இளம்பிராயம் முழுக்க கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் மரக்கட்டைகளை சுமந்திருந்திருக்காள். அதன் விளைவாக அவளது முன்னங்கால்கள் வலுவிழந்து உருமாறி விட்டன. அவளால் உபயோகம் இல்லை என்றான பின்பு அவளை நயவஞ்சகமாக ஒரு கோவிலில் விட்டு சென்றனர் அவரது முதலாளிகள். அங்கு திருவிழாக்களில் பொம்மையாகவும் பிற நாட்களில் ரோட்டில் பிச்சை எடுக்கவும் வைக்கப்பட்டாள்.  இன்று அவளால் சில அடிகள் கூட தத்தி தான் எடுத்து வைக்க முடியும்.  



கௌரி கர்நாடகத்தில் ஒரு கோவிலில் தன் வாழ்நாள் முழுக்க நின்றே கழித்திருக்கிறாள். இதனால் கால்களில் புண்கள் உண்டாகியுள்ளன. அரச இலைகள் மட்டுமே அவளுக்கு உணவாக கொடுக்கப்பட்டன, அபூர்வமாக கோவில் பிரசாதமான இனிப்புகள். இப்படிப்பட்ட சமநிலை அற்ற உணவினால் இன்று அவள் உயர் ரத்த அழுத்தம் சுகர் மற்றும் அதிக உடல் பருமனால் மிகுந்த அவதிக்குள்ளாகி இருக்கிறாள். 

கௌரி
இத்தனைக்குப்பின்னும் அவர்களிடத்தில் தான் எத்தனை பரிவு! மனிதர்களை இன்றும் பகுத்துணர்ந்து பாசம் கொள்ளும் முதிர்ச்சியினை அவர்களிடத்தில் கண்டு ஆச்சர்யம் கொண்டேன்.இன்று தங்கள் வாழ்வின் கரிய பக்கங்களை கடந்து, நல்லுள்ளங்களின் துணையோடு அமைதியான நாட்களை பார்த்ததினால், அவற்றின் மென்மையான நற்குணம் மேலும் பிரகாசிக்கவே செய்கிறது. 
இவ்வளவு எழுதி விட்டேன் ஆனால் அவற்றின் ஈர துதிக்கை தொடுதலையும், மிக அருகாமையில் கேட்ட அவற்றின் மூச்சு காற்றையும் வயிற்றின் நுண்ணிய உருட்டல் ஒலியையும் வர்ணிக்க வார்த்தைகள் இன்றி ஸ்தம்பிக்கிறேன்.அந்த நொடிகளை மீண்டும் மீண்டும் உணர மனது துடிக்கிறது...


கை  தொட்டது நான், உயிர் தீண்டியது அவள்
விழியில் விழுந்து இதயம் நுழைந்த அவள் பார்வை 

அனிஷாவும் கௌரியும் பேசுவதை பார்க்கவே இனிமையாக இருக்கிறது. இயல்பில் மந்தை வகை விலங்காயினும், திணித்து பழக்கப்படுத்தப்பட்ட தனிமையினால் இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் ஒருவரோடொருவர்  பழகவே வெகு நாட்கள் ஆகி இருக்கிறது.


அந்த நாளின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிய சிறு பேச்சுவார்த்தை. பின் ஒன்றாய் சென்று தொங்கிக்கொண்டிருந்த பசும் இலை தளைகளை ஒரு கை பார்த்தனர்.
 சுமார் 20-30  நிமிடங்கள் அங்கு கழித்து விட்டு கிளம்பினேன். அதிலும் 10-15 நிமிடங்களே யானைகளுடன் கழித்திருப்பேன்.  நெடு நேரம் பார்வையாளர்கள் யானைகளுடன் இருப்பதை அவர்கள் ஊக்கப்படுத்துவதில்லை .  அது யானைகள் தம்முடைய இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவதை தடுக்கும் என்பதால். இந்த யானைகள் மனிதர்க்கு கீழ்ப்படுவதை மறக்க வேண்டும். தாம் யார், தம் இயல்பு என்ன என்பதை உணர வேண்டும். அந்த நாளே அவற்றின் வாழ்வில் இனிய நாள். அதற்காக அயராது உழைக்கும் WRRC Malur அன்பு நெஞ்சங்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

நகரத்து சத்தக்காட்டினூடே வீடு என்னவோ திரும்பி விட்டேன். எண்ணம் இன்னும் அவ்விருவரிடம் தான் உள்ளது .

                                                                                                        பி.கு: அடிக்குறிப்பு இல்லாத புகைப்படங்கள் இணையத்திலிருந்து உபயோகித்தவை 








Comments