2015 கோடை விடுமுறை





மலையும் மலை சார்ந்த இடங்களுமாய் கழிந்திருக்கிறது 2015-இன் கோடை விடுமுறை. இமயத்தில் தொடங்கியது எம்மலையாம் தென்மலையில் நிறைவுற்றிருக்கிறது. இந்த நாட்களில் எம் வானெங்கும் பனிச்சிகரங்கள்,வெண்முகில்கள், அடர்மரங்கள்! 

நானும் ஒரு பச்சோந்தியாய் மாற, எங்கும் வியாபித்திருந்த இளம் பச்சையே என் நிறமுமானது. முதல் கதிருக்கு கூக்குரலிடும் சிறுபறவைகளின் உற்சாக ராகம் என் அதிகாலையை இசையால் வருடும். பெருக்கெடுத்து ஒடும் மலையருவியும் ஆறும் பகற்பொழுதை நிறப்ப, நிறைகுடமென சலனமின்றி இறங்கும் மூடுபனி மாலை நேர தேநீர்க்கு கூடுதல் ருசியேற்றும்.

மரம், மழை, முகில், பனி, பறவைகள் - விரல்விட்டு எண்ணுமளவு சொற்களே என் அகராதியில் இடம் பெற்றிருந்த இனிமையான நாட்கள்.மனம் அவ்வப்பொழுது வீட்டையும் ஃபில்டர் காப்பியையும் நோக்கினும் பெட்டியை தூக்கும் எண்ணம் மட்டும் தலைதூக்கவில்லை 
பனிக்கு இமயமென்றால் பசுமைக்கு தென்மலை. தென்மலை என் மலை. ஆண்டிற்கு ஒரு முறையேனும் என் பாதங்களில் அதன் ஈரம் படியாவிடில் என் ஆன்மாவில் சிறு துளை நிச்சயம் விழும்.

இதோ வந்தாயிற்று அன்றாடத்திற்கான நேரம். திரும்ப ரயிலேறும் இந்த பாவப்பட்ட நகரவாசிகளுக்கு அடுத்த விடுமுறையில் தன் முகம் காட்டும் இரக்கங்கொண்ட ஏதேனும் ஒரு மலை 

Comments