சித்தி - Ode to Aunts


Elephants Wildlife Family Tamil Poem
PC: Kalirajan Subramanian


தாய் யானை பெருங்காலம் கரு சுமந்து
குட்டி ஒன்றை ஈணும்
குட்டியையும் தாயையும் அதன் சித்தியே காக்கும்.
நீண்ட நடை பயணங்களில்
தாயும் கன்றும் தளர்வுறும்
சித்தி அரவணைக்கும்.
அல்லும் பகலும் துஞ்சாது
அரணமைத்து காக்கும்.
வேற்று வாடை மெலிதே வரினும்
வேங்கையாய் மாறும்.

ஆக, தாயின் தொப்புள் கொடி ரத்த பாசம்
அவள் தங்கையின் பாசக்கொடியோ  பெரும் நேசம்
சித்திகள் வாய்க்கப்பெற்ற மனிதர்க்கு தெரியும்,
இது விலங்கியல் மட்டும் அல்ல என்று.

சித்தி, ஒத்தையில் தசாவதானி
அப்படி ஐவரை பெற்ற பேறு எனக்கு
சித்திகள் சூழ்ந்த சிறு பிராயம்
அது,  ஒரு அழகிய நிலா காலம் ...

நீங்கள் வேறூரில் இருக்கலாம்
விண்ணுலகிலும் இருக்கலாம்
ஆனால் என்றென்றும் இளங்காற்றாய்
என் மனதருகில் வீசுவீர்கள்.

ஆம்! சித்திகளால் ஆனது என் உலகு .

Comments