|
PC: Internet |
வாழ்க்கை என்னும் நீண்ட நெடிய பயணத்தில், ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு ஒவ்வொரு இலக்கை அடையும் எண்ணம் உருவாகும். ஒவ்வொரு இலக்கும் அந்தந்த காலகட்டத்தில் நம் வாழ்விற்கு ஊக்கமும், அர்த்தமும் சேர்க்கும் முக்கியமான மைல்கல்லாகும். இதில் எந்த துறையில் இளங்கலை பட்டம் பயில்வதென்பது பெரும்பான்மையான பள்ளிக்குழந்தைகளுக்கு அவர்தம் வாழ்வில் முதல் பெரிய இலக்காக அமைகிறது. இதுவே அவர்களின் பெற்றோருக்கு முக்கிய இலக்காகவும் ஆகிவிடுகிறது. இவ்வாறான முதல் பயணத்தில் எங்கள் குழந்தையும், பெற்றோராக நாங்களும் சந்தித்த அனுபவங்களையும், சேகரித்த தகவல்களையும், கற்ற பாடங்களையும் பகிர்வதே இப்பதிவின் நோக்கம். உங்களுக்கு உகந்த தெரிவுகளை நீங்கள் தேர்ந்தெடுப்பதில் இந்த தகவல்களும் உதவ எங்கள் நல்வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
பெற்றோருக்கு
ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான நான்கு வருடங்கள், நம் நாட்டின் பள்ளிக் கல்விமுறையில் திருப்பு முனை வருடங்களாக அமைகின்றன. பெற்றோராக நாம் சிறிது புரிதலுடனும், விழிப்புடனும், முன்னேற்பாடுடனும் இருந்தால் இந்த கட்டத்தின் அடிப்படை தேவைகளை ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றாற்போல் தக்க முறையில் நிறைவேற்றலாம்.
நாம் நன்றாக கருத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்கள்:
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வித்தேர்ச்சியில் மாறுபட்ட தேவைகள் உண்டு. வகுப்பில் நன்றாகப் பயிலும் இரு குழந்தைகளுக்கிடையே கூட தேவைகள் வேறுபடும்.
|
PC: Internet |
மயிலையும், மீனையும் சிறுத்தையாய் சீற கட்டாயப்படுத்தும் பெருங்கொடுமையை நாம் முதலில் கைவிட வேண்டும். வேங்கையால் மட்டுமே ஆனதல்ல காடு. மானும், மீனும், மயிலும், குயிலும், வேழமும், தும்பியும், செந்தளிரும் சேர்ந்ததே செம்மையான வனம். மயிலின் ஆட்டத்தை பட்டைதீட்டுவோம். குயிலின் குரலை வளமையாக்குவோம். அப்பொழுது தான் அவை தம்மளவில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி தன்னம்பிக்கையுடனும், சுயமரியாதையுடனும், தற்சார்புடனும் அகமகிழ்ந்து செழிக்கும்.
எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் குழந்தைகளின் இயல்பான விருப்பங்களும், திறமைகளும் மெல்ல வெளிப்படும். எந்தெந்த பாடங்களில் அவர்களது இயற்கையான ஆர்வம் செல்கிறது, எந்த பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் வருகின்றன என்று கவனிப்போம். வரலாற்றிலோ, மொழியிலோ நல்ல மதிப்பெண் பெறும் குழந்தையை கணக்கிலும், அறிவியலிலும் ஏன் எடுக்கவில்லை என்று மட்டம் தட்டுவதை மறப்போம். எல்லா துறைகளிலும் திறமையுள்ளவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பும் எதிர்காலமும் அமையும் வேளை இது. வீணாக மனம் துவண்டால் அவர்கள் வரலாற்றிலும், மொழியிலும் எடுக்கும் மதிப்பெண்களும் குறையும். இது போலவேதான் கூச்ச சுபாவம் உடைய குழந்தைகளை வற்புறுத்தி பேசச்சொல்வதும். அவர்கள் பேசக் கூசுபவர்கள் அல்லர். மாறாக, சராசரிக்கும் மேலாக தம் சுற்று சூழலை கிரகித்து அதற்கேற்ப தேவைப்பட்டால் மட்டுமே பேச்சை உபயோகிப்பவர்கள். இது பலவீனம் அன்று; ஒரு மாறுபட்ட குணாதிசயம், அவ்வளவே.
நான் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் இப்படி கட்டாயத்திற்குட்பட்டு விருப்பமில்லாததை செய்யும் குழந்தைகளை பள்ளியில் கவனித்திருக்கிறேன். அவர்கள் வெளியில் சொல்லமுடியாத அளவு பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவதைக் கண்டு மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கிறேன். சொல்லப்போனால், உயர்நிலை ஆசிரியராக எனக்கு கிடைத்த அனுபவம் எங்களை மேலும் நல்ல பெற்றோராக்கியது என்றே கூறலாம்.
|
பிள்ளைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதை இதைவிட அழகாக தெளிவுபடுத்த முடியாது PC: Internet |
பெற்றோராக அவர்களின் மீதுள்ள பாசத்திலும், அக்கறையிலும் தான் நாம் எல்லாவற்றையும் செய்கிறோம். இதில் தவறில்லை. ஆனால் பதின் வயது பிள்ளைகளிடம் பக்குவமாக அவர்கள் போக்கில் போய் எவ்விதமான Judgement-உம் இல்லாமல் அவர்களை புரிந்து கொண்டு நாம் கொடுக்கும் அறிவுரைகளே அவர்களை உண்மையாக மேம்படுத்தும். அவ்வாறான அறிவுரைகளை அவர்கள் ஏற்றுக்கொள்வதையும் நாம் பார்க்கலாம். இதற்குத்தான் முன்னாளில் தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன்/தோழி என்றார்கள் போலும்.
அதே போல் ஒவ்வொரு குழந்தைக்கும் பாடப்புத்தகம் தவிர்த்து ஏதேனும் ஒரு விளையாட்டோ, அல்லது இதர கலைகளிலோ கட்டாயம் ஆர்வம் இருக்கும். நம்மால் இயன்ற அளவு அந்த ஆர்வத்தை முறையான பயிற்சியாக்க உதவுவோம். நல்ல பயிற்சியின் வாயிலாக இந்த திறமைகளையும் வளர்க்க கிடைக்கும் வாய்ப்பு, இந்த பதின் வயது சிறாரின் ஒருங்கிணைந்த மொத்த வளர்ச்சிக்கு மிகவும் உதவி புரியும். மேலும் அவ்வயதில் அவர்கள் எதிர்கொள்ளும் மனச்சிக்கல்களை தவிர்க்கவும், தீர்க்கவும் வழி வகுக்கும்.
இதற்கென தனியே பயிற்சிக்கு செல்ல வாய்ப்பில்லையெனில் யுடியூப் போன்ற சேனல்களில் ஏனைய பயிற்சி விடியோக்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இவற்றை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கணக்கிட்டு பார்த்து பயிற்சி செய்வது ஒரு நல்ல மாற்று அனுபவமாக அமையும்.
இவ்வகையில் எங்கள் குழந்தையின் இயற்கையான திறமை உயிரியல் பாடத்தில் வெளிப்படுவதைக் கண்டோம். மேலும் பியானோ இசைக்கருவியை மீட்டுவதில் ஆர்வம் இருப்பதை உணர்ந்து அதற்கான இசை வகுப்பிலும், பின்னர் யுடியூப் வழி பயிற்சியிலும் ஈடுபட உதவினோம். மேலும் எழுதுவதிலும் ஆர்வம் இருப்பதை உணர்ந்து, பள்ளி விடுமுறை நாட்களில் சிறுகதைகள், கவிதைகள், வலைப்பதிவுகள் எழுத ஊக்குவித்தோம்.
இணையத்தின் இமாலய வளர்ச்சியால் இவை எதற்கும் நாம் பெரிதாக பணம் செலவழிக்க தேவையில்லை. பிள்ளைகளின் இயற்கையான போக்கு மீதான கவனம், புரிதல், ஆவன செய்ய ஆர்வம் நம்மிடம் இருந்தாலே போதும். ஒப்பிலா தனிச்சிற்பம் உருப்பெற்று ஓங்கும்.
காசேதான் கடவுளடா
இதைப்பற்றி நான் அதிகம் கூறத்தேவையில்லை. அனைவரும் அறிவோம். பிள்ளைகள் ஆறு-ஏழாம் வகுப்பிற்கு செல்லும் காலம் தொடங்கியே அவர்களின் கல்லூரிப்படிப்பு, தேவைக்கேற்ப அதற்கு முந்தைய பள்ளி-மாற்று செலவுகள், கோச்சிங் கிளாஸ் கட்டணம் ஆகியவற்றிற்கான சேமிப்பை தவறாமல் மாதந்தோறும் செய்யத்தொடங்குங்கள். கல்வி தான் அடிப்படை. அதற்கேற்ப சேமிப்பை முன்னிலைப்படுத்தி இதர வரவு செலவுகளை திட்டமிடுவோம்.
இதில் முக்கியமாக, அவர்களின் இயல்பான பாடத்திறமைகள் இதர திறமைகளை உணர்ந்து அவர்கள் சிறப்பாக செயல்படும் படிப்பை பயில எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதற்கான ஆராய்ச்சியை நாம் குறைந்தது மூன்றாண்டுகள் முன்னர் தொடங்குவது சாலச்சிறப்பு. ஒன்பதாம் வகுப்பு நுழைவு நமக்கு பல வகையில் ஆராய்ச்சி மணி ஒலிக்கும் தருணம்.
நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்
பெருந்தொற்று, ஊரடங்கு, ஆன்லைன் கல்வி, தகுதி தேர்வுகள், கடும் போட்டி, பெருகும் மக்கள் தொகை, தகவல் தொடர்பு புரட்சியிலும் தேவையான பயன்பாடுள்ள தகவல்களை அனைவருக்கும் சேர்ப்பதில் உள்ள குறைபாடு, வியாபாரமயமான கல்வி, நடுத்தர வயதில் நமக்கு ஏற்படும் மாற்றங்கள், வேலைப்பளு, குடும்ப பொறுப்புகள் ஆகியவற்றால் உயர்நிலை, உயர் மேல்நிலை பள்ளி வருடங்கள் குடும்பத்திற்கே சவாலான வருடங்கள் தாம். குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு வகையில் மன உளைச்சலுக்கும், அயற்சிக்கும் உள்ளாகும் காலம்.
|
PC: Internet |
மனஸ்தாபங்கள், வருத்தங்கள் எவ்வளவு முயன்றாலும் வந்து போகத்தான் செய்யும். பெற்றோராக தாயும் தந்தையும் ஒன்றிணைந்து ஒரே குழுவாக குடும்பத்தை பேணுவோம். பிள்ளைகளின் மீது அதீத கவனம் தேவைப்படும் சமயம். ஆயினும் அந்த கவனம் அளவுக்கதிமான தலையீடாக மாறிவிட்டால் எதிர்மறை விளைவுகள் தரும். இரவு உணவை மட்டுமாவது அனைவரும் சேர்ந்து உண்போம். அதீத துரித உணவுகளை தவிர்த்து, எளிதான வீட்டில் செய்த சீரான உணவினை கொடுப்போம். தினமும் குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் நடுநடுவே இளநீர், பழங்கள் ஆகியன உட்கொள்ளும் பழக்கத்தை உருவாக்குவோம். சீரான மனநிலைக்கு சீரான உணவு மிக முக்கியம். பிள்ளைகளை பேச விடுவோம். அவர்கள் பேச்சிலும், மௌனத்திலும், நடவடிக்கைகளிலும் பகிர்வதை உற்று கவனிப்போம். கவனித்தபின் தேவையானதை செய்வோம்.
|
A pic is worth a thousand words :-) PC: Internet |
எல்லாவற்றிற்கும் அளவு உண்டு .அதே போலத் தான் அவர்களின் பதின் வயது போர்குணத்திற்கும், சுதந்திரத்திற்கும், சோம்பேறித்தனத்திற்கும். டாப், மொபைல், மடிக்கணினி ஆகிய கருவிகளுக்கான நேரத்தை வரையறுப்போம். வீட்டில் தினமும் ஒரு வேலையாவது அவர்கள் செய்ய வேண்டும்- தம் அறையை தாம் பேணுவது, பால் வாங்குவது, துணிகளை மடிப்பது, எளிமையான சமையல் செய்வது- இப்படி ஏதேனும். அவர்கள் இதை பின்பற்றும் ஒவ்வொரு தரமும் அவர்களை பாராட்டுவோம், பின்பற்றாத முதல் முறை விட்டு அடுத்த முறை சீரான அதே சமயம் சமரசமில்லாத தொனியில் அவர்களை அறிவுறுத்துவோம். குடும்ப பொருளாதார சூழலை அவர்களுடன் தெளிவாகப் பகிர்வோம். சமச்சீர் உணவு போல சமச்சீரான கட்டுப்பாடும், சுதந்திரமும் அவர்களுக்கே ஒரு தெளிவான வழிகாட்டியாக அமையும்.
|
PC: Internet |
கயிற்றின் மேல் நடனம் தான். என்ன செய்வது! சொற்ப காலம் ஆடித்தான் ஆக வேண்டும். இந்த பருவம் அவர்கள் வாழ்விற்கு அச்சாணி. முடிவில் அனைத்தும் நன்றாக நடக்கும். நம்பி களமிறங்குவோம். நம்பினார் கெடுவதில்லை.
பிள்ளைகளுக்கு
லெட் மீ டெல் எ குட்டி ஸ்டோரி
ஹே!! ப்ரோ!, நீங்க எந்த கிளாஸ் எந்த ஜெண்டர் எந்த ஊர்ல இருந்தாலும் மொதல்ல என்னோட வெரி ஹார்ட்டி காங்கிராட்ஸ் மற்றும் பெஸ்ட் விஷஸ். போன மூணு வருஷமா கொரோனா-ல நீங்க பாத்திருக்கறது எங்களுக்கே இதுவரைக்கும் தெரியாத விஷயம்!
|
PC: Internet |
எவ்ளோ துணிச்சலா, விடாமுயற்சியோட ஆன்லைன் கிளாஸ், திடீர் ஆன்லைன் டெஸ்ட், தள்ளிப்போயிட்டே இருந்த எக்ஸாம்ஸ், சில சமயம் நடக்காமயே போன எக்ஸாம்ஸ், வீட்ல இருந்து ஒர்க் பண்ணதாலயே நெறைய ஒர்க் பண்ண வேண்டியிருந்த, இல்ல சில சமயம் வேலை இழந்திருந்த பேரெண்ட்ஸ், வைரஸ் பத்தின பயம், குடும்பத்துலயும் சுத்தி முத்தியும் நடக்கற வருத்தமான நிகழ்வுகள் எல்லாத்தையும் கடந்து இப்ப திரும்ப ஸ்கூலுக்கோ, இல்ல காலேஜிக்கோ நீங்க போயிருக்கீங்க!! ஹாட்ஸ் ஆப் !! செம !! உங்களுக்குள்ள இவ்ளோ பவர் இருக்கறத பாக்கறப்ப ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
நீங்க வேணா பேசாம டான் ஆயிடறீங்களா 😀
👆 சும்மா ஜோக்குக்கு சொன்னேன் . என்ன, டாக்டர் ஆயிடவா? என்ஜினீயர் ஆயிடவா? டீச்சர் ஆயிடவா? யுடியூபெர் ஆயிடவான்னு லேட்டஸ்ட் டான் படம் ஹீரோ மாதிரி ஒரே குழப்பமா இருக்கா? இல்ல இந்த பீல்டுல தான் போகணும் பட் அதோட எண்ட்ரன்ஸ் எக்ஸாம்ல செலக்ட் ஆயிரணும்னு யோசனையா இருக்கீங்களா? எப்படி இருந்தாலும் ரொம்ப நாச்சுரல், கவலையே படாதீங்க.
உங்க அப்பா, அம்மா மாதிரியே நானும் உங்க ஸ்டேஜ்-அ கடந்து வந்ததாலயும், எங்க வீட்லயும் உங்கள மாதிரியே ஒரு ஆள் இருக்கறதாலயும் கொஞ்சம் ஃப்ரெண்ட்லி ஃப்ரீ அட்வைஸ் குடுக்கறேன். இதையெல்லாம் practical pointers-ஆ எடுத்துக்கிட்டு கொஞ்சம் திங்க் பண்ணி பாருங்க. எவ்வளவு suitable-ஆ இருக்கோ அவ்வளவு யூஸ் பண்ணிக்கோங்க:
|
An effective goal setting mechanism PC: Internet |
1. முதல்ல எந்த பதட்டமோ, பயமோ வேண்டாம். எப்படி ரிலாக்ஸாவும், வெளையாட்டாவும் fun-ஆகவும் இருக்கறதுக்கு நமக்கு இத்தனை வருஷம் வாய்ப்பு கிடைச்சுதோ அதே போல இப்ப உங்களுக்கு உங்க திறமைகளை வெளிக்காட்டவும், நீங்க எவ்ளோ உழைப்பாளி, திறமைசாலின்னு காமிக்கறதுக்கும் வாய்ப்பு, அவ்வளவுதான். ஒன்பதாம் வகுப்புலேந்து உங்கள நீங்களே ஆழ்ந்து கவனிங்க. எந்த பாடம் நல்லா புரியுது, பிடிக்குதுனு தெரிஞ்சுக்கோங்க. அதே சமயம் மற்ற பாடங்களையும் ஒரேயடியா ஒதுக்கிராம அதுலயும் தேவையான மதிப்பெண் எடுக்க பாருங்க. ஏன்னா, பத்தாம் வகுப்பு முடியும் வரையில் எல்லா பாடங்களை பற்றிய அடிப்படை புரிதலும், எல்லா பாடத்தோட மதிப்பெண்களும் நமக்கு தேவை. ஒரு பிரபலமான பாட்டுல சொல்லிருக்க மாதிரி -
Hardworkum venum
Smart workum venum
Self motivation adhu needhanae
Education venum
Dedication venum
Self valuation adha panni paaren
2. நீங்க பத்தாம் வகுப்பு மாணாக்கர் என்றால் பதினொன்றுல என்ன குரூப் எடுத்தா நல்லா படிப்போம்னு அறிவு பூர்வமா யோசிங்க. உங்க வயசுல நிறைய பேர் ஏதாவது ஒரு சப்ஜெக்ட் வேண்டாங்கிறதாலயே வேற குரூப் எடுக்க திட்டமிடுவீங்க. கணக்கு வேண்டாங்கிறதால Pure Science எடுக்க கூடாது. நமக்கு Pure Science பிடிக்குதா? இல்ல கணக்கு பிடிக்காட்டியும் ஓரளவு நல்லாத்தான் போடுறோமானு பாருங்க. கணக்கு பிடிக்கலை- வரலை (அ) கணக்கு பிடிக்கும்-வரும். ஆனா அதே சமயம், எகனாமிக்சோ, காமெர்சோ, அறிவியலோ, ஹியூமானிடீஸோ இயல்பா அதிகம் பிடிக்குதானு யோசிங்க.
இந்த ஆய்வ நீங்க செய்யும்போது உங்க பெற்றோர், ஆசிரியர், உங்கள புரிஞ்சுக்கற பெரியவங்க இவங்க கிட்ட கலந்தாலோசிங்க. இவங்க எல்லாரும் நம்மள கட்டாயப்படுத்தீருவாங்கன்னு பயப்பட வேண்டாம். உங்க தெரிவுகளை(your choices) வெளிப்படையா, நம்பிக்கையோட, தகவல் அடிப்படை ரீதியிலே(based on data points) தெரிவிங்க. பெரியவங்க எல்லாருக்குமே நீங்க நல்லா படிச்சு, சொந்த கால்ல நின்னு வேலை பாத்து வாழ்க்கைல முன்னேறணுங்கிறதுதான் விருப்பம். அதை அடையும் வகைல உங்க விருப்ப பாடத்துலயே வழிமுறைகள் கண்டரிஞ்சீங்கன்னா அவங்களும் புரிஞ்சுப்பாங்க.
|
For the strength of the pack is the wolf, and the strength of the wolf is the pack - Rudyard Kipling PC: Internet |
அதுக்கு உங்களோட matured practical research மொதல்ல ரொம்ப முக்கியம்.
இந்த குரூப் சேர்ந்தா இந்த டிகிரி படிக்கலாம், இந்த வேலை பாக்கலாம் அப்படின்னு நீங்க மொதல்ல ஆய்வு செஞ்சு தகவல் சேத்துக்கோங்க. அந்த ஆய்வு செய்யும் போது உங்க விருப்ப தேர்வுகள் எப்படி மாறுதுன்னும் உற்று கவனிங்க. அது உங்களுக்கே இன்னும் தெளிவான பாதையை காட்டும்.
For ex: எனக்கு ஆங்கிலம் விருப்ப பாடம். ஆனா பேராசிரியர் ஆவதை விட கம்பெனில வேலை பாக்கறது இஷ்டம்- இப்படி உங்களுக்கு தோணிச்சுன்னா அதுக்கேத்த மாதிரி நீங்க கல்லூரில literature major எடுக்காம business communication or business studies major எடுக்க முடியும். இல்லை பேராசிரியர் ஆவது விருப்பமான அதற்கேற்றாற்போல் majors தேர்ந்தெடுக்கலாம். இந்த அளவு deep and practical-ஆ உங்களுக்கு உதவும் வகையில் தகவல்களை சேகரியுங்க.
3. உங்களுடைய பொருளாதார பின்புலத்தை பற்றி குடும்பத்தாருடன் கலந்தாலோசிச்சு புரிஞ்சுக்கோங்க. இது மிகவும் முக்கியமானது. இந்த புரிதல் உங்களை இன்னும் முனைப்போடு படிக்க ஊக்குவிக்கும். இப்பொழுதெல்லாம் எல்லா சிறந்த கல்லூரிகளும் நன்றாக மதிப்பெண் பெற்றிருக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கிறார்கள். ஆகவே உற்சாகத்தோடு பயிலுங்கள். மேலும் பட்டமேற்படிப்பு பயிலும் எண்ணம் இருந்தால் பொருளாதார சூழலுக்கு ஏற்றார் போல் நீங்கள் அதை திட்டமிடவும் செய்யலாம். இளங்கலை முடித்தவுடன் முதுகலையோ அதற்கு மேலுமோ செல்வதா இல்லை நடுவில் சில வருடங்கள் வேலை பார்த்த அனுபவம் பெற்றபின் மேற்படிப்பை தொடர்வதா என்றெல்லாம் திட்டமிட இது உறுதுணையாக இருக்கும்.
4. எந்த பாடத் துறையை(subject) தேர்ந்தெடுத்தாலும் அதில் குறைந்தது இரண்டு மாற்று தெரிவுகளை(backups/alternatives) வைத்து கொள்ளுங்கள். முதலாம் தெரிவுக்கு நாம் தேர்ச்சி பெறாவிடில், அதே பாடத்துறையில் அடுத்ததை நோக்கி பயணிக்கலாம். உயிரியலில் எங்கள் குழந்தையின் முதல் தெரிவாக அலோபதி மருத்துவத்துறை இருந்தது. அதே சமயம் நீட் தேர்வில் நினைத்தவாறு, எங்களால் இயன்ற கட்டணப் பிரிவில் தேர்ச்சி பெறவில்லையெனில் அடுத்ததாக உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியும்(biotechnology research) மூன்றாவதாக நுண்ணுயிரியல் ஆராய்ச்சியும்(microbiology research) இருந்தது. பதினொன்றாம் வகுப்பு சேரும் பொழுதே இந்த மாற்று தெரிவுகளை வரிசைப்படுத்தி இருந்ததால் இது தொடர்பான கல்லூரிகளின் பட்டியல், அவற்றுக்கான நுழைவு தேர்வு பற்றிய விவரங்கள் போன்றவற்றை சேகரிப்பது சிறிது இலகுவானது.
நிற்க. இங்கு நாம் மனதில் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், ஒன்று கிடைக்காமல் அடுத்ததை தேர்வு செய்வதில் எந்த வருத்தமும் கொள்ள வேண்டியதில்லை. உங்களுக்கு பிடித்த பாடத்துறை தானே? நீங்கள் அதில் மிகவும் நன்றாகத்தான் மிளிர்வீர்கள்.
5. வெற்றியையோ, தோல்வியையோ, சவால்களையோ மனதில் ஆழமாக பதித்துக்கொள்ளாதீர்கள். காலையும் மாலையும் போல, இவை வந்து போய்க்கொண்டு தானிருக்கும். உங்களுடைய வெற்றியையும் தோல்வியையும் மூன்றாம் நபர் போல, தள்ளி நின்று நோக்குங்கள். ஒவ்வொரு வெற்றியும் நம் பலம் என்ன, நாம் எதை சரியாகச் செய்கிறோம் என்பதை உணர்த்தும். ஒவ்வொரு தோல்வியும் நம் பலவீனம் என்ன, நாம் எதை திருத்திக் கொள்ளவேண்டும் என்று கூறும். இரண்டிலிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.
இதுவும் கடந்து போகும்
எதுவும் கடந்து போகும்
இன்னும் பத்து, இருபது ஆண்டுகள் கழித்து நீங்கள் திரும்பிப் பார்க்கையில் உங்கள் பாதையில் இவை அனைத்துமே விடிவெள்ளியாய் அமைந்ததை உணர்வீர்கள். எனவே வெற்றியை தலைக்கேற்றாமல், தோல்வியால் துவளாமல், சவால்களை கண்டு சளைக்காமல் சமநிலையோடு முன்னேறுங்கள்.
எதையும் மனதில் பூட்டி வைத்துக்கொள்ளாமல் குடும்பத்தாரிடம், நண்பர்களிடம், ஆசிரியரிடம் பகிருங்கள். மனது விட்டு பேசினால் கிடைக்காத தீர்வென்பதே இல்லை. மனதை இலகுவாகவும், உடலை சுறுசுறுப்பாகவும் வைத்திருந்தால் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது.
|
PC: Internet |
கோச்சிங் கிளாஸ் போகணுமா, வேண்டாமா?
இன்றைய தேதில பெற்றோர், மாணாக்கர் எல்லார் மனதிலும் இருக்கற பெரிய கேள்வி இது. பொதுத்தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள் எல்லாமே வருடா வருடம் கடும் போட்டியுடனும், கடினமாகவும், கணக்கிலடங்கா மாணாக்கர்கள் எழுதுவதாகவும் அமைஞ்சுட்டதால எக்ஸ்ட்ராவா கோச்சிங் சேர்ந்து பயிற்சி பெறுவதில் தவறில்லை. இன்னும் சொல்லப்போனால் பதினொன்னு- பன்னிரண்டாம் வகுப்புகள்ல இது ஒருவித கட்டாயமாகவே ஆகிட்டதுதான் நிதர்சனம்.
எங்கள் அனுபவத்தில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகள்ல அந்தந்த குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் தேவைப்படும் பாடங்களில் பள்ளி பாடத்திட்டம்(school syllabus) நன்றாகப் புரியும் வகையில் தனிப் பயிற்சி எடுப்பது நல்ல பலனளிக்கும். அவரவர் ஊரில் இருக்கும் சிறந்த ஆசிரியர்களிடமோ, அல்லது குறிப்பிட்ட சப்ஜெக்ட்ஸ்க்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்தோ அல்லது யுடியூப் வீடியோக்களை வீட்டில் பெற்றோர் கண்காணிப்பில் பார்த்தோ பயிலலலாம். இந்த பருவத்தில் பாடங்களில் எழும் அடிப்படை சந்தேகங்களைத் தீர்க்க நேரடி பயிற்சி வகுப்புகள் உதவும் என்பதால் நமது அருகாமையில் உள்ள ஆசிரியரிடம் பயிற்சி வகுப்புக்கு செல்வதோ அல்லது பள்ளி ஆசிரியரிடமே ஆர்வமாக சந்தேகங்களைக் கேட்டு தெளிவதோ சாலச்சிறந்தது. ஒன்பதாம் வகுப்பிலேயே நீட், JEE போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பிக்கும் பெரிய பயிற்சி நிறுவன வகுப்புகள் தற்போது தேவை இல்லை. அவை அடிப்படையை தெளிவாக்காமல், அந்தந்த குழந்தையின் தனிப்பட்ட தேவையை கவனிக்காமல், அட்வான்ஸ் பாடங்கள் எடுப்பதிலேயே கவனம் செலுத்துபவை.
பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் நுழைவுத்தேர்வுகளுக்கும் சேர்த்து பயிற்சி கொடுக்கும் கோச்சிங் சென்டர்களில் சேர்வது உகந்தது. எல்லா நுழைவுத்தேர்வுகளிலும் இன்று போட்டி அதிகமாகிவிட்டதால் நீங்கள் பொறியியல் அல்லது மருத்துவ நுழைவுத்தேர்வுகள் எழுதினாலும் சரி, வேறு இளங்கலை நுழைவுத்தேர்வுகள் எழுதுவதாயினும் சரி இந்த காலகட்டத்தில் அதற்குண்டான பயிற்சி எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இதை உங்கள் பள்ளியில் ஒருங்கிணைந்த பயிற்சி(integrated coaching in school) மூலமோ அல்லது தனியாகவோ(separate coaching centers) பெறலாம்.
உயிரியல் பாடத்துறை தெரிவுகள்
இந்த துறையில் எங்கள் குழந்தை வாயிலாக எங்களுக்கு நேரடி அனுபவம் கிடைத்ததால் இதை விரிவாகப் பகிர்கிறேன். இதன் உட்கருத்திலிருந்து நீங்கள் உங்களுக்கு விருப்பமான பாடத்துறையில் தெரிவுகளை எப்படி சேகரிப்பது, தேர்ந்தெடுப்பது என்பன பற்றி யூகித்துக்கொள்ளலாம்.
உயிரியலில் மீது ஆர்வமுள்ள குழந்தைகள் பதினொன்றாம் வகுப்பில் Maths, Biology group (Physics, Chemistry, Biology, Maths) அல்லது Pure Science (Physics, Chemistry, Biology, Optional Subject) group எடுக்கலாம்.
1. பயாலஜி என்றதுமே அனைவருக்கும் முதலில் நினைவில் தோன்றுவது MBBS, BDS மருத்துவ பட்டப்படிப்புகள் தான். இவற்றையும் தாண்டி நீட் நுழைவுத் தேர்வின் மூலமாக ஆயுர்வேத, சித்த , யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளையும் பயில தேர்ச்சி பெறலாம்.
2. வேளாண்மை , கால்நடை வளர்ப்பு மற்றும் அதற்கான வெட்டரிநெரி மருத்துவம், மீன் வளத்துறை பயிலலாம்(Agriculture, Veterinary and Animal husbandry, Fisheries) இவற்றிற்கு தனியாக நுழைவு தேர்வும் கலந்தாய்வும் (counselling) நடக்கும்.
3. B.Tech Biotechnology, Biomedical engineering, Bio Engineering போன்ற பொறியியல் சார்ந்த படிப்புகளுக்கு Maths, Bio group-இல் பயின்றோர் விண்ணப்பிக்கலாம். இதில் Vellore Institute of Technology (Vellore, Bhopal branches) போன்ற சில கல்லூரிகள் Pure Science group எடுத்தவர்களுக்கும் நுழைவுத்தேர்வு மூலமாக விண்ணப்பிக்கும் வாய்ப்பு கொடுக்கிறார்கள். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று அந்த கல்லூரியில் சேர்ந்தால், முதல் இரண்டு செமெஸ்டர்களுக்கு கணக்கும் ஒரு பாடமாக அமையும். அதைப் பயின்று தேர்ச்சி பெற வேண்டும்.
4. B.Pharm, D.Pharm, M.Pharm போன்ற மருந்தகம் தொடர்பான பட்டபடிப்புகளை பயிலலாம்.
5. Integrated BS-MS இரட்டை பட்டப்படிப்புகள் (Dual degree programs) , Integrated MSc - VIT, PSG, SRM போன்ற பல கல்லூரிகள் தற்போது இத்தகைய பட்டபடிப்புகளை வழங்குகிறார்கள். இந்த பட்டங்கள் ஆராய்ச்சி துறையில் நுழையவும், தொழிற்சாலைகள் மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் ஆராய்ச்சியாளராக பணியமர்வதற்கும் உதவுகின்றன.
6. IISER, IISc - பொறியியலுக்கு IIT, NIT கல்லூரிகள் எவ்வாறு தலை சிறந்தவையோ அதே போன்று அறிவியல் துறைகளில் BS-MS, BSc-MSc, PhD போன்ற பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளில் சிறந்த தேர்ச்சி பெற இவ்விரண்டு வகையான அரசு கல்வி நிறுவனங்களும் சிறந்தவை. நமது நாட்டில் IISER கல்லூரிகள் ஏழு இடங்களில் இருக்கின்றன. IISc பெங்களுருவில் உள்ளது. இவற்றிற்கு JEE, KVPY மற்றும் பிரத்தியேகமான நுழைவு தேர்வு எனும் மூன்று வாயில்கள் வழியாக அட்மிஷன் நடைபெறுகிறது.
7. Biotechnology 4 yrs Research based Bachelor degree, 3 years Biotechnology UG degree - முதலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆராய்ச்சியுடன் கூடிய நான்கு வருட இளங்கலை பட்டப்படிப்பு HCL நிறுவன அதிபரான சிவ நாடார் அவர்கள் நிறுவியுள்ள சிவ நாடார் பல்கலைகழகத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. மூன்று வருட இளங்கலை உயிரியல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு நம் நாட்டின் ஏனைய பெரும்பாலான கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் அமிர்த விஸ்வ வித்யாபீடத்தில் மூன்று வருட மூலக்கூறியல் மருத்துவம் (BSc Molecular Medicine) தொடர்பான இளங்கலை பட்டமும் பயிற்றுவிக்கப்படுகிறது.
மேலே உள்ள 5, 6, 7 பாயிண்டுகளில் கூறியுள்ள பட்டப்படிப்புகள் யாவும் மருத்துவ மற்றும் உயிரியல் ஆராய்ச்சி, உயர் கல்வி நிறுவனங்களில் பேராசிரியராகவோ, ஆராய்ச்சியாளராகவோ வேலை வாய்ப்பைத் தருகின்றன.
இவை அனைத்தும் தொடர்பான மேலும் விவரங்களுக்கு கீழுள்ள link-ஐ சொடுக்கவும் . அதிலிருந்து அந்தந்த கல்லூரி தொடர்பான வலைத்தளத்திற்கு சென்று, உங்களுக்கு தேவையான விவரங்கள் சேகரிக்கலாம். நாங்கள் பெங்களுருவில் வசிப்பதால் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரிகளை இதில் அதிகம் காணலாம். நீங்கள் உங்கள் விருப்ப ஊருக்கு ஏற்றாற்போல் இணையத்திலும், பள்ளி வட்டாரங்களிலும் விசாரித்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Note: ஒவ்வொரு கல்லூரி மற்றும் நுழைவு தேர்வுகளின் தற்போதைய விதிகள் மாறியிருக்கக்கூடும் எனவே நீங்கள் அந்தந்த வலைத்தளத்திற்கு சென்றோ அல்லது கல்லூரியை அணுகியோ தகவல் சேகரிப்பது உகந்தது.
நுழைவுத்தேர்வுகள் & கல்லூரி அட்மிஷன் அட்டவணைகள்
இது பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். அவரவர் விருப்பத்திற்கேற்ப, நாம் சில கல்லூரிகளைத் தேர்வு செய்து வைத்திருப்போம். அவற்றுள் சில, அரசு நுழைவுத்தேர்வுகளின் அடிப்படையில் கவுன்சிலிங் மூலம் அட்மிஷன் நடத்துபவையாக இருக்கும். வேறு சில, தாமே நுழைவுத்தேர்வு நடத்தி அட்மிஷனை முடித்துவிடக் கூடியவையாக இருக்கும். இந்த ஒவ்வொன்றுக்குமான கால அட்டவணையை நாம் ஒரு கண் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். பத்து நாட்களுக்கொரு முறை உங்களின் விருப்ப கல்லூரிகளின் வலைத்தளங்களை சென்று பார்த்துக்கொள்வது சிறந்தது.
விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிடப்படுவதால் எளிதாக ஆன்லைனிலேயே கெடு முடிவதற்குள் விண்ணப்பிக்கலாம். அதன் பின் அவர்கள் நுழைவுத்தேர்வுக்கான தேதி மற்றும் விவரங்களை அவர்களது வலைத்தளத்திலோ அல்லது நீங்கள் பதிவு செய்துள்ள ஈமெயிலிலோ அனுப்புவார்கள். பிள்ளைகளே, அவர்கள் நடத்தும் தேதியில் அந்தந்த நுழைவுத்தேர்வுகளை தவறாமல் எழுதுங்கள். ஒவ்வொரு கல்லூரியின் சென்ற பல வருடங்களுக்கான நுழைவுத்தேர்வு வினாத்தாள் இணையத்தில் எளிதாகக் கிடைக்கும். அவற்றை போட்டுப்பார்த்து பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்.
தனியார் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் பெரும்பாலும் Jan-Marchஇல் விண்ணப்பங்களை தொடங்கி Apr-Juneக்குள் தங்களது நுழைவுத்தேர்வுகளை நடத்தி முதல், இரண்டாம் ரவுண்டு அட்மிஷன்களை முடித்து விடுவார்கள். ஆகையால் NEET, JEE, CUET, State Entrance Exams போன்ற அரசு தேர்வுகளை எழுதுவோர், மாற்று பட்டப்படிப்பிற்கு(for backup/alternate choice of degree) ஏதேனும் ஒரு தனியார் கல்லூரியில் நுழைவுத்தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றிருப்பின் அங்கு அட்வான்ஸ் அட்மிஷன் கட்டணம் செலுத்தி சீட்டை தக்கவைத்து கொள்வது உகந்ததாக இருக்கும். அரசு நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாக பெரும்பாலும் Aug-Sep ஆகி விடுவதால், ஒரு வேளை இவற்றின் ரிசல்ட் சரியாக அமையவில்லை எனில் அந்த வருடம் வீணாகாது.
இதிலும் முக்கியமாக நீட் தேர்வு ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கும் மாணவர்கள் உயிரியலில் மாற்று பட்டபடிப்புகளையும் அவற்றின் சிறப்பம்சங்கள், மதிப்பு, வேலைவாய்ப்பு குறித்தும் தெரிந்து கொள்வது சாலச்சிறந்தது
பி.கு: இங்கு நாம் செலுத்தும் first installment fees-ஐ பிரபலமான சிறந்த கல்லூரிகள் பல்கலைக்கழக மானியக் குழுவின்(UGC) ஆணைப்படி ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் சிறிது பிடித்துக்கொண்டு refund செய்து விடுவார்கள். அப்படிப்பட்ட கல்லூரிகளில் seat booking செய்யுங்கள். ஏனைய சில கல்லூரிகள் திருப்பி தராமல் விட்டுவிடலாம். கவனம். Booking feesஐ செலுத்தும் போதே இதை அவர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். பல கல்லூரிகள் இதற்கான விதிமுறைகளை அவர்களின் வலைத்தளத்திலேயே பிரசுரித்தும் விடுவார்கள்.
இந்த முன்னேற்பாட்டை நாம் செய்துவிட்டால், பொது நுழைவுத்தேர்வுகளில் வேண்டிய ரிசல்ட் வராவிட்டாலும் குழந்தைகள் தங்களின் அடுத்த சிறந்த தெரிவுக்கு சென்று விடலாம். இம்முறையில் எங்கள் குழந்தைக்கு நீட் தேர்வில் வேண்டிய ரிசல்ட் வராததால், தன் மாற்று விருப்பத் தெரிவான உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான இளங்கலை பட்டப்படிப்பை இனிதே தொடங்கியுள்ளார்.
நிறைவுரை
அருமை இளம் நண்பர்களே! இந்தப் பதிவை நீங்கள் அதிகம் அறிந்திராத ஒரு மகாகவி உங்களுக்காக வடித்த வரிகளோடு நிறைவு செய்கிறேன். அவர் பெயர் கவியரசர் கண்ணதாசன்.
என்றும் ஒன்றே செய்யுங்கள்
ஒன்றை நன்றே செய்யுங்கள்
நன்றும் இன்றே செய்யுங்கள்
நீங்கள் எதிலும் வெல்லுங்கள்
வீரரின் வாழ்விலே வெற்றிமேல் வெற்றியே
🙏God bless🙏
மேலும் குறிப்பிட்ட விவரங்கள் அறிய இந்த பதிவின் கமெண்ட்ஸ் பகுதியில் உங்கள் கேள்விகளை பதிவிடவும். எனக்கு தெரிந்ததை கட்டாயம் பகிர்கிறேன்.
இவ்வலைப்பதிவின் ஆங்கில மொழியாக்கம்,
இங்கு .
Comments
Keep writing and sharing.
The previous regulations, known as the University Grants Commission (Promotion and Maintenance of Standards of Academic Collaboration between Indian and Foreign Educational Institutions) Regulations, 2016, which will now stand repealed, required two institutions to tie-up with each other after obtaining the UGC’s approval. The UGC Chairman said that under the new regulations to be made public soon, universities and colleges will no longer be required to seek its permission to do so, if they met the ranking criteria.
https://www.hindustantimes.com/india-news/foreign-collaborations-in-works-at-48-varsities-101663545803090.html
https://www.thehindu.com/education/colleges/tie-ups-between-indian-and-foreign-universities-simplified/article65336253.ece
https://punemirror.com/pune/others/Lavasa-next-destination-for-foreign-varsities-in-country/cid7182965.htm
Will be a very useful pointer for the many anxious parents and students who are currently in this phase.
A well written article Priya 👍